நாக்கை துருத்தி செய்தியாளர்களை மிரட்டிய ஏ.டி.எஸ்.பி. மீது நடவடிக்கை: தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஜூலை 18 -ம் தேதி கருணாநிதி பிறந்தநாளையொட்டி, நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், 'முதல்வர் விஜய் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தவெகவினர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், விளாத்திகுளம் பகுதியில் அமைந்துள்ள மார்க்கண்டேயனின் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதரவாளர்கள் போலீஸ் வாகனம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்தி, எம்எல்ஏ மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், அவரை படம் எடுப்பதற்காக அங்கு செய்தியாளர்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி. திபு செய்தியாளர்களை தள்ளி விட்டு அங்கிருந்து செல்லும்படி கூறினார். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே வந்த திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது ஏ.டி.எஸ்.பி. திபு செய்தியாளர்களை நோக்கி நாக்கை துருத்திக் கொண்டு வந்து பாருங்கள் என்று கூறியதுடன் ரௌடிகள் போன்று செயல்படுவதாக மிரட்டினார். இதற்க்கு செய்தியாளர்கள் தாங்கள் தங்கள் வேலையை மட்டுமே பார்ப்பதாக கண்டனம் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைது விவகாரத்தில் ஏ.டி.எஸ்.பி. திபு செய்தியாளர்களை நாக்கை துருத்தி மிரட்டியதற்கு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவிப்பதோடு ஏ.டி.எஸ்.பி. திபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.